Saturday, March 25, 2006

நானும் நானோ? - 2

இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.

'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.

அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?

ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?

எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.

இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.

நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.

Tuesday, March 14, 2006

நானும் நானோ?

பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...

என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?

Thursday, March 02, 2006

எச்சரிக்கை



கடவுள், கருணை
என்று சொல்லிக்கொண்டு
யாரும் என்னிடம் வந்துவிட வேண்டாம்.

நான்
உங்கள் முகத்தில்
உமிழக் கூடும்.
அல்லது
என் கூர்நகங் கொண்டு
முகத்தைக் கிழிக்கக் கூடும்.

என்
அறியாமை கண்டு சிரிக்கவோ,
அல்லது
எனக்கு ஞானம் வர வேண்டி அழவோ,
உங்கள் மதம்சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
என்ன இழவானாலும்,
என் காதில் விழாதபடிச் செய்யுங்கள்.
அது நல்லது,
உங்களுக்கு.