Tuesday, April 11, 2006

என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை

மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.

தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.

எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.

ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.

காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.

என் இன்பம் எதில்?

நண்பர் பாழ் எழுதிய கவிதை 'தேடாதே, தொலைந்து போவாய்' -இன் தூண்டுதலில் எழுதியது...


பாழ்,

நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.

கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.

இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.

இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?

அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?

எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...

Wednesday, April 05, 2006

ஒரு காயலான் கடையைப் பற்றி...

அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.