Tuesday, June 27, 2006

கடலில் சேர்ந்த ஆறு

நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.

என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.

இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?

அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.

1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)

2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)

3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)

4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)

5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)

6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.

இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.

சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)

Monday, June 19, 2006

பசுக்கொலை செய்யுங்கள் (அ) பாதுகாப்பற்ற நிம்மதி

தொடரும் அறிதலில்
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.

இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.

எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.

பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.

Saturday, June 10, 2006

பிரார்த்தனை

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனோ கண்ணில் கண்ணீர் பெருகிற்று. தேடினாலும் காரணம் கிடைக்கப் போவதில்லை. இந்த ஒலியலைகள் உள்ளே சென்று என்ன செய்கின்றனவென்று என்றுதான் அறிந்தேன்? காண்பதெல்லாம், ஏதோ அமைதி அல்லது நெகிழ்வு. ஏன்? தெரியாது. பக்தி? கேள்விகள் கேட்டு அதையும்தான் துரத்தியாயிற்றே. பக்தியுடன் எதையாவது பாடி அல்லது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பிரார்த்தனை செய்தோ, இன்னுமதிகம் காலம்.

பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.

எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.

இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!

உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!