Saturday, December 08, 2007

மூத்திரக் கடுப்பும், சிரிப்பு போலீசும்

நடிகை குஷ்பூ அவங்க கால் மேல கால் போட்டா, இந்து முன்னணிக் காரய்ங்களுக்கு மூத்திரக் கடுப்பு வருதாம். நமக்கு மூத்திரக் கடுப்பு வந்தா கொல்லைக்குப் போவோம், இவிங்க கோர்ட்டுக்குப் போறாய்ங்க. இனி ஒவ்வொரு நீதிபதியும் எங்க கோர்ட்டுக்கு வாங்க, எங்க கோர்ட்டுக்கு வாங்கன்னு குஷ்பூவுக்கு இன்விடேஷன் அனுப்புவாய்ங்க. என்ன எழவுய்யா நடக்குது தமிழ்நாட்டுல?

Wednesday, November 14, 2007

வீர வணக்கம்!

உணர்வொன்றும் மரத்து விடவில்லை, உறவை மறந்து விட
அறிவின்னும் அழிந்திடவில்லை, உண்மை உணராதிருக்க
இதயம் ஒன்றும் கல்லன்று, ஈழத்தமிழர் நிலை கண்டும் காணாதிருக்க.

என் அலுவலக அறைப் பலகையில்...


Tuesday, November 06, 2007

இந்த முறையும்

சாலையோரக் கற்சுவரில்
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.

Sunday, May 06, 2007

அழகே அழகு

ரொம்ப நாளாச்சு இங்க ஏதும் எழுதி. வேலை நிறைய; படிக்கணும்னு வாங்கி வச்ச புத்தகங்கள் நிறைய. தமிழ்மணம். கீற்று எல்லாம் படிக்கறதுக்கே நேரத்தைப் பொறுக்கிச் சேர்க்க வேண்டியிருக்கு. அப்படியே ராசா பக்கம் போய்ப் பார்த்தா, ஏறக்குறைய மூணு வாரத்துக்கு முன்னாடி 'அழகே அழகு'ன்னு உருகியிருக்கார். அதோட விட்டாரா, என்னையும் அதுல இழுத்து விட்டிருக்கார். என்னையும் ஞாபகம் வச்சிருக்கார்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி!

சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!

ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.

அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.

2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.

மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.

அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.

பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.

தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.

காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.

பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;

மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.

'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.

Saturday, April 07, 2007

பார்வையாளனின் துயரம்

அந்தச் சக பயணி, தன்னை ஒரு பார்வையாளன் என்று கூறிக் கொண்டான்.
'கடைசி வரை வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவதாக உத்தேசமோ?' என் கேள்விக்கு ஒற்றைச் சொல்லில் பதில் வந்த பிறகுதான், நான் அதை எதிர் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

பார்க்கலாம்.

இப்போது என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

நான் பார்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு தேடிக்கொண்டிருக்கின்றேனோ என்று.

என்று?

பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அலுத்துப் போகவில்லை?

களைத்தும் போவதுண்டு.

மகிழ்ச்சியை உணர்ந்ததுண்டா?

மகிழ்ச்சியென்று காணும் வரை, உணர்ந்ததுண்டு.

துயரமொன்றும் இருக்காதே!?

உனக்குத் தெரியாது. பார்வையாளனின் துயரம். கொடிது, பெரிது, நெடிது...

ஆகா... அவரவர் துயரம்!

சரிதான். இந்தப் புன்னைகையோடு நிறுத்திக்கொள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உன் வாழ்வைத் தொடர விரும்பினால்.

உற்றுப்பார்த்தேன் அவனை.

திடீரென்று மறைந்திருந்தானென்றால், எவ்வளவு சுவாரசியமாய் இருந்திருக்கும்! அதுதான் வேண்டாம், கொஞ்சம் உணர்ச்சியையாவது முகத்தில் காட்டக் கூடாதா?

அவனோ, என்னைத் திரும்ப உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விமான நிலையத்தில் நுழைந்தபோது...

ஆசையுடன் வளர்த்த தாடி
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.

Friday, February 16, 2007

தினமலர் - ஐகோர்ட்

நீதிமன்றம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளபோதும், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்படியென்ன உறுதி தினமலருக்கு? மற்ற எல்லா செய்தித்தாள்களும் நீதிமன்றம் என்று எழுதும்போது தினமலர் மட்டும் கோர்ட் என்ற எழுதும் காரணம் என்ன?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?

Tuesday, February 13, 2007

காதலிலே என்ன ஆச்சு?

( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)


நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!

அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!

எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!

ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!

காதல் - ஒரு தலைப்பில் பல கவிதை

(காதலர் தினத்தை முன்னிட்டு...)

*********************

தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.

எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.

தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?


*********************

மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!

*********************

நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!

பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!

*********************

Thursday, February 01, 2007

சொற்சிலுவைகள்

சொற்களும்
நம்மைப் போன்றவையே!

கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.

பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.

சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.