Friday, February 16, 2007

தினமலர் - ஐகோர்ட்

நீதிமன்றம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளபோதும், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்படியென்ன உறுதி தினமலருக்கு? மற்ற எல்லா செய்தித்தாள்களும் நீதிமன்றம் என்று எழுதும்போது தினமலர் மட்டும் கோர்ட் என்ற எழுதும் காரணம் என்ன?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?

Tuesday, February 13, 2007

காதலிலே என்ன ஆச்சு?

( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)


நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!

அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!

எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!

ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!

காதல் - ஒரு தலைப்பில் பல கவிதை

(காதலர் தினத்தை முன்னிட்டு...)

*********************

தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.

எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.

தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?


*********************

மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!

*********************

நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!

பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!

*********************

Thursday, February 01, 2007

சொற்சிலுவைகள்

சொற்களும்
நம்மைப் போன்றவையே!

கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.

பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.

சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.