Thursday, December 17, 2009

நீ தூங்கும் நேரத்தில்

உழைத்துக் களைத்து நீ
உறங்குகின்ற ஓரிரவில்
அருகினில் நானமர்ந்து,
அன்பின் அமைதியும், அழகும்,
என்னுள்ள நிலத்தில் விரிக்கும்
பரவச நிழல் பருகும் பறவையாயிருப்பேன்.

மலரமரும் வண்ணத்துப் பூச்சியாய்,
உன் நெற்றியில் இதழ் பதிக்கச் சொல்லும்
ஆசைக்கு அணையிட்டு,
உன் அலைக்கூந்தல் தலைவருடி
அமர்ந்திருப்பேன்,
துளியும் நீ உணராமல்.

நீயென்னும் அற்புதம்
என் வாழ்வில் நிகழ்ந்ததெண்ணி,
நெஞ்சம் நெகிழ்ந்திருப்பேன்,
கண்கள் பனித்திருப்பேன்.

பிறகு,
உறங்கும் உருவத்தின்
கண்ணாடிப் பிம்பம் போல்,
உன்னருகில் நான் கிடந்து,
நீயாக மாறுகின்ற
நினைவினில் மிதந்திருப்பேன்.

Saturday, October 10, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 2

முதல் பகுதி - 'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

தொடர்ச்சி ---

கோணங்கியும், வாசுவைப் போலவே, நாகார்ஜுனன் இணையத்தளத்தை விடுத்து சிறு பத்திரிகைகளில் எழுத வர வேண்டுமென்று கூறினார்.

அடுத்து, தமிழவன் பேசினார். அவரது நெல்லை வழக்குப் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூட்டத்திற்கு வரும் வழியில் துணை முதல்வர் செல்லும் காரணத்தால் செய்யப்பட்ட போக்குவரத்துக் கெடுபிடிகள் குறித்துக் கூறி, அறுபதுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் பின்னால் அணிவகுத்துச் சென்ற காலத்தில் இப்படியொரு நிலை வருமென்று நினைக்கவில்லை என்றார்.
நாகார்ஜுனன் பதிவுகளில் கூறுகின்ற பல்வேறு மேற்குலகச் சிந்தனையாளர்களின் பெயர்களும், சிந்தனைகளும் காண்பவர்க்கு பயமுறுத்துவது போல் தோன்றலாம், ஆனால் இப்போக்கு தவறானதல்ல, தனியானதுமல்ல. இந்திய மொழிகள் பலவற்றிலும் இது செய்யப்படுகிறது என்றார்.
நாகார்ஜுனனுடனான தனது தொடர்பு உருவான காலத்தை நினைவு கூர்ந்து கூறினார். கோணங்கிக்கும், நாகார்ஜுனனுக்குமான சிந்தனை ஒருமையைக் கூறும் விதத்தில், ‘நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை, அவற்றைக் கோணங்கி எழுதுகிறார்’ என்றார். சண்முகம் அவர்கள் கூறியது போல, தமிழ்ச் சூழலிலிருந்து தொலைவில் வசிப்பவர்களிடையே தமிழ் மீதான, தனித்தன்மை மீதான ஈடுபாடு கூடுகிறது, தமிழகத்தில் உள்ளது போல எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போகத் தோன்றுவதில்லை என்று பொருள்படக் கூறினார்.

பிறகு, நாகார்ஜுனன் பேச எழுந்தார். தன் மொழி குறித்துக் கூற வந்தவர், லண்டனில் பணி காரணமாக, உடன் தமிழில் பேச அதிகம் யாருமில்லாததன் காரணமாக, தமிழ் பேச வாய்ப்புக் கிடைப்பது எப்போதாவதுதான் என்று கூறினார். தமிழக இலக்கிய உலகில் நிலவும் அரசியலும் தனக்குத் தெரியாது என்றார். ஆங்கிலத்தில் எழுதினால் கிடைக்கும் பணமும், பெயரும் அதிகமென்றாலும், அது தன்னால் இயலாததல்லவென்றாலும், தமிழில் எழுதவில்லையென்றால் தான் இல்லை என்றார். மேலும் ஆம்னெஸ்டியில் பணிபுரியும் பின்புலத்தில், அவரது பணி, நம் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் இருப்பதில் அவருக்குள்ள கூடுதல் சுமையை, கூட்டத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டினார்.

கடந்த இரு ஆண்டுகளாகத் தான் கடினமாக உழைத்திருப்பதாகவும், அதற்கான பலனே இந்நூல்களென்றும் கூறினார். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆற்றலைச் சில சமயம் தற்போது உணர்ந்ததாகவும், ஆயினும் இத்தகைய உழைப்பை உடல் தாங்குவதில்லை என்பதால் சற்றே மட்டுப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

இலக்கியப் போக்கு என்பதைப் பத்தாண்டுகளில் கணக்கிடுவது சரியல்ல, அது நூறு, நூற்றைம்பது ஆண்டுக் கணக்கிலேயே அறியப்படக் கூடியது என்றார். ”தென்னகத்தின் வரலாறு இன்னும் யாராலும் முழுமையாக, சரியாக எழுதப்படவில்லை, சென்ற நூற்றாண்டுகளின் இந்திய வரலாறு என்பது வங்கத்தை மையமாகக் கொண்டே கூறப்பட்டிருக்கிறது. சில முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதான அளவில் நின்று போய் விட்டன, அதன் மீதான விரிந்த பார்வையைக் காணவில்லை. கோணங்கி கூறியது போல, இயற்கை என்பதை நம் இலக்கியத்தில் காண இயலவில்லை. இயற்கையுடன் இயைந்த, ஒரு பரந்த காலகட்டத்தைக் கூறும் வகையிலான பணிகள் செய்யப்படவில்லை. நாவலாக அதை எழுதுவது சற்றே எளிது, ஆனால் அது போதாது” என்றவர், தான் அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் இரு ஆண்டுகளில் அதனை எதிர்பார்க்கலாமென்றும் கூறினார்.

கூடங்குளம் குறித்து சண்முகம் அவர்கள் கூறியதன் தொடர்ச்சியாக, எண்பதுகளில் அவரும் நண்பர்களும் தீவிரமாக இயங்கியிருந்தபோதும், அதன் பின் நடந்தவற்றை அவர்களால் முன்கூற இயலாமல் போனதானது பணிவைக் கற்றுத் தருவதாகவும், இப்பணிவுடனே எதிர்வரும் செயல்களைச் செய்யவேண்டுமென்றும் கூறினார்.
சிறுபத்திரிகைகளில் எழுதுவது குறித்துக் கூறும்போது இணையம் என்பது ஓர் இடைநிலை ஊடகம் மட்டுமே என்றார்.

நிறைவு செய்யுமுன்பு, வளர்மதியைப் பேச அழைத்தார் பேரா வீ.அரசு. வளர்மதி, இணையத்தின் ஊடக சுதந்திரத்தை விதந்து பேசினார். தனது மார்க்ஸ் குறித்த கட்டுரையை எந்தச் சிறுபத்திரிகையும் வெளியிடாத நிலையில் கீற்றில் வெளியிட இயன்றதைச் சுட்டிக்காட்டினார். இலக்கிய உலகில் விவாதங்கள், தனி மனித விரோதமின்றி நடைபெற வேண்டுமென்றவர், தேவைப்பட்டால் தான் கடுமையாகப் பேசவும் தயங்க மாட்டேன் என்றார். இணையத்தின் சுதந்திரம் பற்றி பதிலிறுத்த அரசு, சுதந்திரம் என்பது ஊடகம் யார் கையிலுள்ளது என்பதைப் பொறுத்ததுதானேயொழிய, இணையம், அச்சு என்ற வேறுபாடு இல்லை என்றார்.

கூட்டம் நிறைவுபெற்றது.

Tuesday, October 06, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

கடந்த வெள்ளியன்று சென்னையில் நடந்த நாகார்ஜுனன் அவர்களின் நளிர் என்ற நூலின் விமர்சனக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன்.

புதனன்று இரவுதான் இக் கூட்டம் நடப்பது குறித்து அறிந்தேன். கட்டாயம் செல்ல வேண்டுமென்ற ஆவல் உந்தித் தள்ளினாலும், நான் அங்கு என்ன செய்யப் போகிறேன் என்று தோன்றியதும் உண்மை. ஆயினும் 'இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ' என்றில்லாமல், 'பூக்கள் மலரும் தோட்டத்தில் பூச்சி' என்ற அளவிலாவது எனக்கும் இந்நிகழ்வுக்குமான உறவு இருப்பதைப் போகத் தூண்டிய ஆர்வமே உணர்த்தியதால், சென்று வேடிக்கை பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கியது கூட்டம். நான் நூலக அரங்கத்தை அடைந்தபொழுது ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். ஒரு சிலரது புகைப்படத்தை எங்கோ வலைப்பதிவுகளில் கண்டதாகத் தோன்றினாலும் சென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளவில்லை. எனது தன்னடங்கிய இயல்புதான் காரணமெனினும், அத்துடன் சென்ற நோக்கத்தைத் தவிர வேறெதையும் செய்ய ஆர்வமில்லாதிருந்ததும் ஒரு காரணம்.

நாகார்ஜுனன், அவரது தாயார், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் மட்டுமே எனக்கு முன்பே அடையாளம் தெரிந்தவர்கள். பேராசிரியர் வீ.அரசு, தமிழவன், சண்முகம், வாசு ஆகியோரைக் கண்டதும், அவர்களது விமர்சன உரையைக் கேட்டதும் மகிழ்ச்சி. இணையத்தில் வளர்மதியைப் படித்திருக்கிறேன், இன்று காணும் வாய்ப்பும் கிட்டிற்று.

பேராசிரியர் வீ.அரசு அவர்கள் நாகார்ஜுனனுடைய ஃப்ரெஞ்ச் மொழித் தொடர்பு, கவிதைத் தமிழாக்கம் என்பன குறித்துப் பேசத் தொடங்கினார். இருந்தாலும், அதில் முற்றிலும் உட்புகவில்லையென்று எனக்குத் தோன்றியது. அது தவிர்த்த, நளிர் குறித்த பல்வேறு கருத்துக்கள் கூறினார். நளிரில் காணக்கிடைக்கும் ஈழம் குறித்த கட்டுரைகளின் சோகம் குறித்தும் அவர் பேசினார் என்று நினைக்கிறேன். ஆர்தர் ரைம்போவின் கவிதகளைத் தமிழாக்கியதில் நாகார்ஜுனன் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் குறித்தும் பேசினார்.

வாசு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விமர்சன உரையைப் பார்த்துப் பேசினார். அவ்வுரை, நல்ல கூர்ந்த பார்வையுடன், அகன்ற அறிவுடன் நாகார்ஜுனனின் மூன்று கட்டுரைகளை அணுகி, அவை குறித்த பார்வையை விரிவாக விளக்குவதாக இருந்தது. திணை இசை சமிக்ஞையில் நாகார்ஜுனன் எழுதும் தீவிர இலக்கியம், தத்துவம் குறித்த பதிவுகளில் உரையாடல் என்பது குறித்து வருந்தினார். அவற்றைத் தொடர்ந்து வாசித்தாலும் உரையாடுமளவு சரக்கில்லாதவன் என்ற முறையிலும், இடையில் வாசிக்காமல் விட்டு இப்போது வாசிக்கும்போது சில கேள்விகள் தோன்றினாலும் கேட்காதவன் என்ற முறையிலும் எனக்குச் சற்றே குற்ற உணர்வு தோன்றாமலில்லை.
வாசுவின் உரையில் 'முக்கியம்' என்ற சொல் அடிக்கடி வந்தபோது அதில் சிக்கிக் கொண்டது மனம். 'significant' என்பதைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்தாலும், அதற்குத் தமிழில் வேறு நல்ல சொல் வேண்டுமென்று ஏனோ தோன்றியது.
வாசுவின் விமர்சன உரையை முழுவதுமாக நாகார்ஜுனன் திணை இசை சமிக்ஞையில் வெளியிடுகிறார்.

சண்முகம் அவர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தாழ்ந்த குரலில், சீரான வேகத்தில் தனது கருத்துக்களைக் கூறினார். நாகார்ஜுனன் பத்து வருடங்களாக ஏன் எழுதவில்லை என்று கேட்பவர்கள், அவர் இன்றும் லண்டனில் இருந்தும் ஏன் தமிழில் எழுதுகிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற பொருள்படக் கூறினார். அதற்கு முன் தினம் நடந்த கூட்டத்தில், ஏதோ விவாதம் நடைபெற்றிருந்ததென்று அறியக் கிட்டியது. நவீனம், பின்நவீனம், மாயாவாத யதார்த்தம் போன்ற இலக்கியப் போக்குகளைத் தமிழில் பின் தொடர்வதையும், அவற்றின் போதாமையின்போது வேறு சில போக்குகளில் சென்று சேர்வதைக் குறித்தும் கூறினார். ஏன் இவற்றைத் தொடர்ந்த புதிய முறை ஒன்று நம்மிடையே தோன்றவில்லை என்று என் அறியாமனம் எண்ணிற்று. அதற்கான பதில், நாகார்ஜுனன் உரையில் மறைமுகமாகவேனும் கிட்டிற்று.

எண்பதுகளில் நாகார்ஜுனன் உள்ளிட்டவர்கள் தீவிரமாக எதிர்த்துப் போராடிய கூடங்குளம் அணு உலைத் திட்டம் இன்று எவ்வித எதிர்ப்புமின்றி நடந்தேறுவதன் முரண் குறித்தும் சண்முகம் கூறினார். நியாயம்தானே! சிறுவயதில் நெல்லை செல்லும்போதெல்லாம் கூடங்குளம் என்ற பேருந்துப் பெயர்ப் பலகையைக் காணும்போது மனதில் தோன்றிய குறுகுறுப்புக்கு, நாகார்ஜுனன் போன்றோர் செய்த போராட்டங்கள் குறித்து அப்போது வாசித்ததுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். அதை அடுத்து நான் கூடங்குளம் குறித்து அறிவது, பல ஆண்டுகட்குப் பின்னர் அவ்வப்போது நடக்கும் சிறு போராட்டங்களும், திட்டங்கள் நிறைவேறுவது குறித்து வெளிவரும் வெற்றி அறிவிப்புகளுமே. இரண்டுமே தமிழகப் பொதுமக்களுக்குப் பொருட்படுத்தத் தேவையில்லாதனவாக இருக்கின்றன.

கோணங்கி அவர்களின் உரையில் அவர் கூறிய கருத்துக்கள் சில, முக்கியமாக, இயற்கையைக் கண்டுகொள்ளாத இலக்கியமும், அறிவும் என்ன பயன் தர இயலும் என்று அவர் வினவியது, ஏற்கனவே சில கட்டுரைகளில் வாசித்திருந்தவையாக இருந்தாலும், மனதில் ஆழப் பதிவதாக இருந்தது. 'உங்கள் நகரத்தின் அத்தனை நூலகங்களிலிருந்தும் உள்ள புத்தகங்களைக் கொண்டு அரை டம்ளர் தண்ணீரைத் தருவிக்க முடியுமா' என்றார் அவர். 'இனி வரும் கால இலக்கியங்களில் நீர்தான் முக்கியமான பாத்திரமாக இருக்கப்போகிறது' என்று அவர் கூறியதன் காரண, காரியங்கள் மனதில் சட்டெனப் புலப்பட்டன.

-- தொடரும்

Tuesday, May 26, 2009

இலங்கையின் சித்தம்; இந்தியாவின் பாக்கியம்

இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, லிபியா, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா, பக்ரைன், க்யூபா, எகிப்து, நிகரகுவா, பொலிவியா - இவைதான் இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு தந்து கையொப்பமிட்டிருக்கும் நாடுகள்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இரு பகுதிகள்.

மனித உரிமைப் பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பின் அடிப்படையிலமைய வேண்டும். மேலும், அதன் குறிக்கோள் உறுப்பு நாடுகளின் மனித உரிமை சார்ந்த கடமைகளை நிறைவேற்றும் திறனை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசு வேறுபாடுகளைக் களைந்து, புலிகளால் பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பல பத்தாயிரக் கணக்கான மக்களை விடுவித்ததையும், இலங்கை மக்களுக்குப் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதி செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் வரவேற்கிறது.


இதில் இந்தியாவின் கையொப்பம் செய்யப்பட்டாகி விட்டது. தமிழக முதல்வர் எழுதிய கடிதம் எதற்காக? யாரை ஏமாற்ற? எந்த அறியாமையின் அடிப்படையில்? அல்லது எந்த அறியாமையின் மேலுள்ள நம்பிக்கையில்?

------------------------------------------------------------------------------

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்கக் கோரி, ஸ்விஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஜெனிவாவைச் சேர்ந்த 'யு என் வாட்ச் அமைப்பு' வலுவற்றது என்றும் ஏமாற்றமளிப்பது என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் கூறியவை,

இத் தீர்மானம் மிகச் சுருக்கமானது, மிக மிகத் தாமதமானது

சர்வதேச விசாரணைக்குப் பதிலாக இலஙகை அரசைத் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளச் சொல்லும் இத்தீர்மானம் நகைப்புக்குரியது. ஐநாவுடனான ஒத்துழைப்புக்காகவும், இனப் பாகுபாட்டுக்கெதிரான நடவடிக்கைகளுக்காகவும் இத்தீர்மானம் பாராட்டுகிறது, உண்மையோ அதற்கு நேரெதிரானதாயிருக்க.

2006-இல் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீர்மானத்தைப் பின் வாங்காமல் முன்னெடுத்துச் சென்றிருந்தால், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம்.
நன்றி:
http://blog.unwatch.org/
http://nagarjunan.blogspot.com/

Sunday, May 24, 2009

வெட்கமும், கொதிப்பும்

இலங்கைப் படுகொலைகள் குறித்த நாகார்ஜுனன் அவர்களின் பதிவு படித்தேன். அங்கு நான் எழுதிய எனது கருத்து.

அரசுகள் இவ்வாறு வன்முறை நிகழ்த்தும் சூழலில் தீவிரவாதம் தோன்றாதிருந்தால்தான் வியப்பு. அது பயங்கரவாதமாக மாறாதிருந்தால்தான் வியப்பு. எம்மில் பலருக்கு, இயலாமையும், கோபமும் தோன்றி, அன்றாட அலுவல்களில் கரைந்து போயின. இன்னும் சிலரில் கையறுநிலை நீங்காக் கசப்பையும், வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. என் நண்பனொருவன், இந்தியப் பொருளாதாரத்தை நசுக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறான். சற்றே பொருளாதாரம் ஓங்கியதால்தானே, அண்டை நாடுகளின் மேலான வல்லாதிக்கத்திற்கான கனவும், ஆசையும் என்பது அவன் வாதம்.

அறிவுப்ப்புலம் என்பதான ஒன்று என்ன செய்யக்கூடும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்? என் புரிதலில், இன்னுமொரு தேசத்தில் அகதிகள் என்றொரு சொல்லின் அவசியம் நேராதிருப்பதைத் தடுப்பதே அறிவுப்புலத்தின் பணியாயிருக்க முடியும். ஆயினும், அதில் சிறிதேனும் வெற்றி கிட்டுமாவென்ற ஐயம் பெரிது. நம் கண் முன்னால், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகள் வெற்றிப் பெருமிதத்துடன் செய்து முடித்துள்ள காரியங்களை எதிர்த்துக் கேள்வி கூட எழவில்லையே இங்கு. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி இரண்டாம் பக்கத்தில், முதல் பக்கத்தில் கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அமைதி திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தம்பட்டம். இன்று, அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை அமைச்சர் பதவிகளுக்காக. யார் ஆண்டாலும் இதேதான் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது, ஆயினும் செய்த தவறுகட்குத் தண்டனை வேண்டாம் கண்டனம் கூட இல்லை யாருக்கும். மக்களுக்கு இத்தவறுகளில் பங்குண்டா?

வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டுகொண்டிருந்தேன். சற்றே வயதில்/உருவில் வலிய சிறுவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கும். கண்டு பொருமுபவர்கள் ஓரம் நின்று ஓலமிட மட்டும்தான். அல்லது, கடமையைச் செய்தோமென்ற திருப்தியில் தீவிரவாதத்திலோ, வேறெதாவது வாதத்திலோ கலந்து வெகு நிச்சயமாக ஒடுக்கப்படவேண்டியதுதான். அல்லது, கண்டு பொருமும் ஒருவரிடம், நீ வந்து புரட்சி செய்யேன் என்று கேள்வி கேட்கலாம். இன்று பாதுகாப்பாகவும், நாளை பணக்காரனாகவும் இருந்து கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.

எழுதுவதைப் படித்து பொதுக்கருத்து உருவாகும் காலம் இன்னும் மிச்சமிருக்கிறதா? அறிவுரீதியில் மக்களைத் திரட்டிய புரட்சி என்ற ஒன்று சாத்தியமா? வலியை உணர்ந்த மக்களின் குரல்வளை முறிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் அதில் நூற்றிலொரு பங்கேனும் உணர முடியுமா? அவரவர்க்கான எலிப் பந்தயமும், ஊடக மயக்கமும் அதற்கு வழி விடுமா?