Tuesday, October 06, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

கடந்த வெள்ளியன்று சென்னையில் நடந்த நாகார்ஜுனன் அவர்களின் நளிர் என்ற நூலின் விமர்சனக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன்.

புதனன்று இரவுதான் இக் கூட்டம் நடப்பது குறித்து அறிந்தேன். கட்டாயம் செல்ல வேண்டுமென்ற ஆவல் உந்தித் தள்ளினாலும், நான் அங்கு என்ன செய்யப் போகிறேன் என்று தோன்றியதும் உண்மை. ஆயினும் 'இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ' என்றில்லாமல், 'பூக்கள் மலரும் தோட்டத்தில் பூச்சி' என்ற அளவிலாவது எனக்கும் இந்நிகழ்வுக்குமான உறவு இருப்பதைப் போகத் தூண்டிய ஆர்வமே உணர்த்தியதால், சென்று வேடிக்கை பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கியது கூட்டம். நான் நூலக அரங்கத்தை அடைந்தபொழுது ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். ஒரு சிலரது புகைப்படத்தை எங்கோ வலைப்பதிவுகளில் கண்டதாகத் தோன்றினாலும் சென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளவில்லை. எனது தன்னடங்கிய இயல்புதான் காரணமெனினும், அத்துடன் சென்ற நோக்கத்தைத் தவிர வேறெதையும் செய்ய ஆர்வமில்லாதிருந்ததும் ஒரு காரணம்.

நாகார்ஜுனன், அவரது தாயார், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் மட்டுமே எனக்கு முன்பே அடையாளம் தெரிந்தவர்கள். பேராசிரியர் வீ.அரசு, தமிழவன், சண்முகம், வாசு ஆகியோரைக் கண்டதும், அவர்களது விமர்சன உரையைக் கேட்டதும் மகிழ்ச்சி. இணையத்தில் வளர்மதியைப் படித்திருக்கிறேன், இன்று காணும் வாய்ப்பும் கிட்டிற்று.

பேராசிரியர் வீ.அரசு அவர்கள் நாகார்ஜுனனுடைய ஃப்ரெஞ்ச் மொழித் தொடர்பு, கவிதைத் தமிழாக்கம் என்பன குறித்துப் பேசத் தொடங்கினார். இருந்தாலும், அதில் முற்றிலும் உட்புகவில்லையென்று எனக்குத் தோன்றியது. அது தவிர்த்த, நளிர் குறித்த பல்வேறு கருத்துக்கள் கூறினார். நளிரில் காணக்கிடைக்கும் ஈழம் குறித்த கட்டுரைகளின் சோகம் குறித்தும் அவர் பேசினார் என்று நினைக்கிறேன். ஆர்தர் ரைம்போவின் கவிதகளைத் தமிழாக்கியதில் நாகார்ஜுனன் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் குறித்தும் பேசினார்.

வாசு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விமர்சன உரையைப் பார்த்துப் பேசினார். அவ்வுரை, நல்ல கூர்ந்த பார்வையுடன், அகன்ற அறிவுடன் நாகார்ஜுனனின் மூன்று கட்டுரைகளை அணுகி, அவை குறித்த பார்வையை விரிவாக விளக்குவதாக இருந்தது. திணை இசை சமிக்ஞையில் நாகார்ஜுனன் எழுதும் தீவிர இலக்கியம், தத்துவம் குறித்த பதிவுகளில் உரையாடல் என்பது குறித்து வருந்தினார். அவற்றைத் தொடர்ந்து வாசித்தாலும் உரையாடுமளவு சரக்கில்லாதவன் என்ற முறையிலும், இடையில் வாசிக்காமல் விட்டு இப்போது வாசிக்கும்போது சில கேள்விகள் தோன்றினாலும் கேட்காதவன் என்ற முறையிலும் எனக்குச் சற்றே குற்ற உணர்வு தோன்றாமலில்லை.
வாசுவின் உரையில் 'முக்கியம்' என்ற சொல் அடிக்கடி வந்தபோது அதில் சிக்கிக் கொண்டது மனம். 'significant' என்பதைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்தாலும், அதற்குத் தமிழில் வேறு நல்ல சொல் வேண்டுமென்று ஏனோ தோன்றியது.
வாசுவின் விமர்சன உரையை முழுவதுமாக நாகார்ஜுனன் திணை இசை சமிக்ஞையில் வெளியிடுகிறார்.

சண்முகம் அவர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தாழ்ந்த குரலில், சீரான வேகத்தில் தனது கருத்துக்களைக் கூறினார். நாகார்ஜுனன் பத்து வருடங்களாக ஏன் எழுதவில்லை என்று கேட்பவர்கள், அவர் இன்றும் லண்டனில் இருந்தும் ஏன் தமிழில் எழுதுகிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற பொருள்படக் கூறினார். அதற்கு முன் தினம் நடந்த கூட்டத்தில், ஏதோ விவாதம் நடைபெற்றிருந்ததென்று அறியக் கிட்டியது. நவீனம், பின்நவீனம், மாயாவாத யதார்த்தம் போன்ற இலக்கியப் போக்குகளைத் தமிழில் பின் தொடர்வதையும், அவற்றின் போதாமையின்போது வேறு சில போக்குகளில் சென்று சேர்வதைக் குறித்தும் கூறினார். ஏன் இவற்றைத் தொடர்ந்த புதிய முறை ஒன்று நம்மிடையே தோன்றவில்லை என்று என் அறியாமனம் எண்ணிற்று. அதற்கான பதில், நாகார்ஜுனன் உரையில் மறைமுகமாகவேனும் கிட்டிற்று.

எண்பதுகளில் நாகார்ஜுனன் உள்ளிட்டவர்கள் தீவிரமாக எதிர்த்துப் போராடிய கூடங்குளம் அணு உலைத் திட்டம் இன்று எவ்வித எதிர்ப்புமின்றி நடந்தேறுவதன் முரண் குறித்தும் சண்முகம் கூறினார். நியாயம்தானே! சிறுவயதில் நெல்லை செல்லும்போதெல்லாம் கூடங்குளம் என்ற பேருந்துப் பெயர்ப் பலகையைக் காணும்போது மனதில் தோன்றிய குறுகுறுப்புக்கு, நாகார்ஜுனன் போன்றோர் செய்த போராட்டங்கள் குறித்து அப்போது வாசித்ததுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். அதை அடுத்து நான் கூடங்குளம் குறித்து அறிவது, பல ஆண்டுகட்குப் பின்னர் அவ்வப்போது நடக்கும் சிறு போராட்டங்களும், திட்டங்கள் நிறைவேறுவது குறித்து வெளிவரும் வெற்றி அறிவிப்புகளுமே. இரண்டுமே தமிழகப் பொதுமக்களுக்குப் பொருட்படுத்தத் தேவையில்லாதனவாக இருக்கின்றன.

கோணங்கி அவர்களின் உரையில் அவர் கூறிய கருத்துக்கள் சில, முக்கியமாக, இயற்கையைக் கண்டுகொள்ளாத இலக்கியமும், அறிவும் என்ன பயன் தர இயலும் என்று அவர் வினவியது, ஏற்கனவே சில கட்டுரைகளில் வாசித்திருந்தவையாக இருந்தாலும், மனதில் ஆழப் பதிவதாக இருந்தது. 'உங்கள் நகரத்தின் அத்தனை நூலகங்களிலிருந்தும் உள்ள புத்தகங்களைக் கொண்டு அரை டம்ளர் தண்ணீரைத் தருவிக்க முடியுமா' என்றார் அவர். 'இனி வரும் கால இலக்கியங்களில் நீர்தான் முக்கியமான பாத்திரமாக இருக்கப்போகிறது' என்று அவர் கூறியதன் காரண, காரியங்கள் மனதில் சட்டெனப் புலப்பட்டன.

-- தொடரும்

No comments: