Sunday, February 26, 2006

நேற்று



நேற்று, 'Gone with the wind' (Margaret Mitchell) படித்து முடித்தேன். இடையில் சிறிது இழுத்தது போல் தோன்றினாலும், மிகவும் அருமையான நாவல். எல்லா நல்ல நாவல்களையும் போல, முடித்த பின், சற்று நேரம் இருந்து யோசிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அதன் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து நீங்கப் போவதில்லை.

முடித்தேனா? அடுத்து, பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' மூன்றாவது முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இதைக் கடைசியாகப் படித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கங்கு வெட்டி, படித்து முடித்தேன், அப்படியொன்றும் சிறந்த நாவலாக இப்போது தோன்றவில்லை என்றாலும். பிறகு, வார இறுதியின் மிகப் பெரிய வேலையான துணி துவைப்பதை முடித்தேன்.

முடித்தேனா? அடுத்து, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து 'குயில் பாட்டு'. அதன் பின், 'கண்ணன் பாட்டு'.

இத்தகையதொரு நாள் புதிதில்லை எனக்கு. ஒரே நாளில் இவ்வளவு படிப்பதுவும் புதிதில்லைதான். வீட்டில் தனியாக இருந்தேன், அதுவும் புதிதில்லை. கல்லூரி நாட்களில் நான் மிகவும் ரசித்தது, அறை நண்பர்களனைவரும் ஊருக்குப் போய் விட்ட நாட்களைத்தான். பெங்களூர் வந்த பிறகு கூட, பெயர் தெரியாத தெருக்களில், பூங்காக்களில், ஏதோ கன்னட நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளில் எனத் தனியாக அலைந்ததுண்டு.

நேற்று இயலவில்லை. 'வார்த்தை தவறி விட்டாய்' படித்ததும், புத்தகத்தை மூடி வைத்தேன். சட்டையை அணிந்து கொண்டேன். வீட்டை விட்டுக் கிளம்பி, தெருக்களில் இலக்கின்றி நடக்கத் தொடங்கினேன். வெறும் 'போர்' அடித்ததுதான் காரணம் என்று நினைத்தேன்.

இல்லை போலிருக்கிறது.

Thursday, February 23, 2006

மறப்போம்

ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.

இன்னும் கூறும்.

இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.

பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.

பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.

இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.

ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.

அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.

அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.

ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.

ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.

Wednesday, February 22, 2006

பாராட்டு

அடுத்தவர் பாராட்டுக்காக
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?

வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?

அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?

அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?

அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?

உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?

நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.

Saturday, February 18, 2006

போதும் பயணம்

இன்னுமொரு வைக்கோல்
என் வண்டியில் ஏற்றுங்கள்.
எதற்காகவென்று தெரியாத சுமையுடன்
எங்கென்றும் என்னவென்றும் தெரியாத இலக்கு நோக்கி
ஏனென்று தெரியாமல் அலைந்து திரிவதை விட
அச்சு முறிந்து
சற்றே
இளைப்பாறுகிறேன்.

ஏதாவது எழுத

மீண்டும்

இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.

சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.

மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?

இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?

ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.

ஏன் எழுத? - 2

ஏன் எழுத வேண்டும்? - 2

சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.

என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?

ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.

இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.

இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)

-தொடரும்