Wednesday, October 17, 2012

பாரதி - அம்ஷன் குமார் அவர்களின் ஆவணப்படம்.
மனைவியும் மகனும் ஊருக்குச் சென்றிருக்கும் இடைவெளியில், பல மாதங்களுக்கு முன் அம்ஷன்குமார் அவர்களுக்கு எழுதித் தருவித்திருந்த பாரதி ஆவணப்படத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. இடைநிறுத்தாமல் பார்த்து முடித்தேன். பெரும்பாலான விஷயங்கள் எப்போதாவது ஒரு முறையேனும் வாசித்தறிந்திருந்தவைதான் என்றாலும், ஏறக்குறைய மறந்து போயிருந்தவை. சில புதியனவும் உண்டு, மிகவும் ரசித்தேன். முக்கியமாக, பாரதியுடன் பழகியவர்களின் அனுபவங்கள்.

எப்பேர்ப்பட்ட கவிஞனை அலட்சியம் செய்திருக்கிறார்கள் அப்போதைய தமிழர்கள்! இப்போது மட்டுமென்ன? திருவல்லிக்கேணி சென்றதுண்டு, எட்டயபுரம் வழியாகக் குறைந்தது ஆண்டுக்கு இருமுறை செல்கிறேன். சமீபத்தில்தான் பாண்டிச்சேரிக்கும் சென்றிருந்தேன். அம்பாசமுத்திரத்துக்கும் கூட. அங்கிருந்து கடையம் இருபது கிலோ மீட்டர்தான். பாரதி தொடர்பான இடங்கள் ஒன்றையும் இதுவரை சென்று பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு. வெறுமனே நினைத்து என்ன பயன்?
இடத்தைப் பார்த்துத்தான் என்ன? பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அவ்வப்போதாவது பாரதி கவிதைகளைப் படித்து வந்திருக்கிறேன். அதை விடவா?

படத்தைப் பார்த்து முடித்தவுடன், அதில் காட்டிய இடங்களுக்கெல்லாம் ஒருமுறை சென்று காண வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. பாரதியின் கவிதைகளைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதை விட, அவரைப் பற்றி இன்னும் அறிய வேண்டுமென்ற ஆவல் மிகுகிறது. பாரதி ஒரு பன்முக ஆளுமை என்பதை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறது.

நாட்டின் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரு விடுதலை வீரர் பெயரைக் கூறுகையில், தெற்கில் சுப்ரமணிய ஐயர் என்று சுதேசமித்திரன் ஆசிரியர் பெயரைக் கூறுகிறார்கள். (மேற்கில் திலகர், வடக்கில் லாலா லஜபதி ராய், கிழக்கில் சுரேந்திரநாத் பானர்ஜி). குறை சொல்ல வேண்டுமென்றல்ல. Context என்றும் சொல்ல முடியவில்லை. அவரது பங்களிப்பு பற்றி அதிகம் நாம் அறிந்திருக்கவில்லை. அக்காலகட்டத்தில், மக்களைத் திரட்டிய, அனைவரும் அறிந்திருக்கக் கூடிய தலைவர்களும் தமிழகத்தில் இருந்திருப்பார்களே என்று தோன்றியது.

கடந்த சில ஆண்டுகளில் பாரதியைப் பற்றிய விமர்சனங்களும் நிறைய வாசித்தேன். கருதத்தக்கவை உண்டு என்றாலும், சில அதிகப்படி என்று தோன்றியதுண்டு, எ.கா வே.மதிமாறன் அவர்களின் 'காசி நகர்ப் புலவர்' வரிக்கான விமர்சனம். இன்னும் அவரது புத்தகத்தை வாசிக்கவில்லை. பாரதி வாழ்ந்த காலம், அப்போதைய கருத்தியல் வளர்ச்சி ஆகியவற்றையும் இந்த விமர்சனங்களுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். பாரதி போன்ற ஆளுமையை நினைவில் வைக்க எவ்வளவோ நல்ல காரணங்கள் உண்டு. ஹும்... நினைவில் வைக்கவாம், காரணமாம். மறந்து போ, யாருக்கு நட்டம்?

நேரடியாக சம்பந்தமில்லை என்றாலும், இன்னும் பல ஆளுமைகளைப் பொதுப்புத்திக்கு நினைவுறுத்த யாருமில்லை என்பதும் உண்மைதான். பாரதி அந்த அளவில் பரவாயில்லை. ஆனால், அது வேறு. அவன் கவி போதும், அவன் நினைவு வாழ. நீயும் நானும் பேசிக்கொண்டேயிருப்போம்..

இந்தப் படத்திற்கு நிறைய உழைத்திருக்கிறார்கள். ஒலி, ஒளிப் பதிவு, இசை, குரல், எடிட்டிங் அனைத்தும் மிகப் பொருத்தம், அருமை. பிரித்தறிந்து பாராட்ட எனக்கு அறிவும் இல்லை. இது சொல்லலாம் - அம்ஷன் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பங்களிப்பும் முக்கியமானது.

ஆயினும், பாரதியை இன்னும் முழுதாகக் காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. இன்னும் எவ்வளவோ இருக்கும்தான். இதற்கே இரண்டு ஆண்டுகட்கு மேல் ஆயிற்றாம். படம் வெளியான ஆண்டு 1999 என்று நினைக்கிறேன். அம்ஷன் குமார் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, உண்மையான ஆர்வமிருந்தால் மேலும் தேடிப் படிக்க வேண்டியதுதான்.

 சில பகுதிகளை வேண்டுமென்றே கடந்து அல்லது காணாது போனது போலிருந்தது. பாரதி எழுதிய மன்னிப்புக் கடிதம், நிவேதிதாவுடனான சந்திப்புக்கு முன்னதான பெண்ணுரிமை அறிவு, அவரது போதைப் பழக்கம் (ஒரு குறிப்பு இருந்தாலும்) போன்றவை.

ஆனாலும், இது உண்மை. வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மை எல்லாம்.


--------------
பாரதி - ஆவணப்படத்தின் குறுந்தகடு வேண்டுவோர் அம்ஷன் குமார் அவர்களுக்கு எழுதலாம். amshankumar at gmail dot com.


--------------
படத்தில் சில காட்சிகளில் பாரதியாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தோன்றுகிறார்.
போட்டோ கிடைக்கவில்லை. பதிலாக - அவர் பரிந்துரைத்த, பாரதி பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய பதிவு - http://mdmuthukumaraswamy.blogspot.in/2011/10/blog-post_09.html


No comments: