Tuesday, April 11, 2006

என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை

மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.

தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.

எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.

ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.

காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.

2 comments:

Vaikunth said...

aaha ungalukulla ippadi oru kavingar irupadhu theriyamal ponadhe!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

அவன் இங்கேதான் இருக்கிறான், மிகப்பல வருடங்களாக!
ஆனால், என்ன பயன்? பயன் என்று ஏதும் இருக்க வேண்டுமா? அவனை நான் கவனித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவன் என்னைப் பார்த்துக் கொள்வானா? ஒன்றும் அறிந்தேனில்லை. எனக்குள்ளான கூட்டத்தில் மற்றுமொருவனாகப் பரிதாபமாகக் கிடக்கிறான்.
என்னைப் போலவே!

மன்னிச்சுக்குங்க. ரொம்பப் புலம்பிட்டேன்.

- வித்யா