Wednesday, April 05, 2006

ஒரு காயலான் கடையைப் பற்றி...

அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.

6 comments:

Pavals said...

காயலான் கடையில தாங்க நிறையா ரசனையான விஷயம் கிடைக்கும்.. அதை போய் "வெறும்" காயலான் கடை'ன்னு சொல்லிட்டீங்களே வித்யா?

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நிஜம்தான், ராசா.
ஆனா, புகையிலைச் சாறு துப்பின கண்ணாடி வழியா, காவேரியைக் கூட ரசிச்சுப் பார்க்க முடியலை. காயலான் கடை எம்மாத்திரம்?
:-)

Anonymous said...

உங்களுடைய பதிவுகளைப் பார்த்தேன். எல்லாம் நன்றாக இருக்கிறது.
இதில் காயலான் கடையை ஏன் சொல்கீறீர்கள்?
காதலில் தோற்றவனுக்கும் காயலான் கடைக்கும் என்ன சம்மந்தம்?
கவிதையில் அதை ஒப்பிட்டு எதுவும் இல்லையே?

-சக்தி

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சக்தி,

நன்றி.

காயலான் கடை, பழையவை, உடைந்தவை நிறைந்து கிடைக்குமிடம். அவன் மனதிலும் அதுவேவல்லவா?

புகையிலைச் சாறு துப்பப்பட்டது பின்னரே. எனினும் துப்பப்படுவதற்காகக் காத்திருந்த கண்ணாடி வழியாகத்தான் அவனால் பார்க்க முடிகிறது. அது போல்தான், எதிர்காலம் கடந்த காலத்தை விட ஒன்றும் சிறந்ததாக இருக்கப் போவதில்லை என்று நினைக்கிறான். (தோல்வியுற்ற கடந்த காலம் வழியே எதிர் காலத்தைப் பார்க்கிறான்)

அவனது எதிர்காலம், காயலான் கடையைப் போல, பழைய நினைவுகள் இறைந்து கிடக்குமிடமாகவே இருக்கப் போகிறது.

அவன், நிலவொளியில் தெரிந்த காயலான் கடையைப் பற்றித்தான் எழுத ஆரம்பித்தான். ஆனால், வெறுமனே தன் துயரத்தைத்தான் காயலான் கடை வழியாக சொல்லப் போகிறோம் என்று தெரிந்த பின், வேஷத்தைக் கலைத்துவிட்டு, நேரடியாக எழுதி விட்டான். தலைப்பை மாற்றவில்லை.

ஆக, எதைப் பார்த்தாலும், எதைப் பற்றி எழுதினாலும், தலைப்பு எதுவானாலும், அவன் (எவனுமே?) பார்ப்பதுவும், எழுதுவதுவும் தன்னைப் பற்றித்தான்.

என்ன சொல்கிறீர்கள், சக்தி?

-வித்யா

Anonymous said...

உண்மை தான்! ஒருவன் தன்னை பாத்தித்த, அனுபவித்த விஷயங்களை அழகாக அழுத்தமாக சொல்ல முடியும். நம்மில் பலரும் தன்னைப் பத்தி சிந்திப்பதையே வாழ்க்கையாக கொண்டு இருக்கிறோம். நான் இதை செய்தேன், இதை சாதித்தேன், இதில் தோல்வி, என்னை அவன் காயப் படுத்தி விட்டான் என, நான், எனது என்பதிலேயே கவனம் செலுத்திறோம். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் என்னை முன்னிலைப் படுத்தியே (என்னை சிந்தித்தே இதை எழுதுகிறேன். (நான் "நான் புராணத்தில்" கில்லாடி)

மனம் தனக்கு நேர்ந்த எந்த ஒரு துன்பத்தையும் தொடர்ந்து அசை போட்டுக் கொண்டிருக்கும், அடுத்த துன்பம் வரும் வரை. அடுத்த துன்பம் வந்த உடன் முன்னால் சந்தித்த துன்பங்களின் நினைவுகள் சில சமயம் வந்து போகும். அந்த நினைவுகளும் வலிக்கும்.
காலம் செல்ல செல்ல அந்த நினைவுகள் மறந்து போகும். ஆனால் எப்போதாவது நினைவு கூறும் போது வலிக்கும். இப்படி எல்லோரும்/பலரும் இருப்பார்களா? என்னைப் பொருத்த வரை எனக்கு அனுபவசாலிகள், வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள், டேக் இட் இசி பாலிசி உடையவர்கள் மனத்தால் இவ்வளவு கஷ்டப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் நான் இப்படித்தான் இருக்கிறேன். என் மனத்தோடு போராடுகிறேன்.
எனக்கு நீங்கள் உங்கள் இன்னொரு பதிவில் சொன்னது முற்றிலும் உண்மை எனத் தோன்றுகிறது. -

எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும்.
இதைத் தான் அவ்வப்போது நினைத்து கொள்கிறேன்.

நாம், நம் மனத்தில் நம் துன்பங்களை, நம் நினைவுகளை இட்டு விடுகிறோம்.
நம்மை, நம் மனத்தை நாம் சந்தித்த துன்பங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள நம் மனத்தை தயார் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

நீங்கள் நினைப்பதையும் எழுதுங்கள் நண்பரே.

-சக்தி

sathesh said...

ஆழமான உணர்வை மிக அழகாய் வடித்துள்ளீர்கள்...