Saturday, October 10, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 2

முதல் பகுதி - 'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

தொடர்ச்சி ---

கோணங்கியும், வாசுவைப் போலவே, நாகார்ஜுனன் இணையத்தளத்தை விடுத்து சிறு பத்திரிகைகளில் எழுத வர வேண்டுமென்று கூறினார்.

அடுத்து, தமிழவன் பேசினார். அவரது நெல்லை வழக்குப் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூட்டத்திற்கு வரும் வழியில் துணை முதல்வர் செல்லும் காரணத்தால் செய்யப்பட்ட போக்குவரத்துக் கெடுபிடிகள் குறித்துக் கூறி, அறுபதுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் பின்னால் அணிவகுத்துச் சென்ற காலத்தில் இப்படியொரு நிலை வருமென்று நினைக்கவில்லை என்றார்.
நாகார்ஜுனன் பதிவுகளில் கூறுகின்ற பல்வேறு மேற்குலகச் சிந்தனையாளர்களின் பெயர்களும், சிந்தனைகளும் காண்பவர்க்கு பயமுறுத்துவது போல் தோன்றலாம், ஆனால் இப்போக்கு தவறானதல்ல, தனியானதுமல்ல. இந்திய மொழிகள் பலவற்றிலும் இது செய்யப்படுகிறது என்றார்.
நாகார்ஜுனனுடனான தனது தொடர்பு உருவான காலத்தை நினைவு கூர்ந்து கூறினார். கோணங்கிக்கும், நாகார்ஜுனனுக்குமான சிந்தனை ஒருமையைக் கூறும் விதத்தில், ‘நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை, அவற்றைக் கோணங்கி எழுதுகிறார்’ என்றார். சண்முகம் அவர்கள் கூறியது போல, தமிழ்ச் சூழலிலிருந்து தொலைவில் வசிப்பவர்களிடையே தமிழ் மீதான, தனித்தன்மை மீதான ஈடுபாடு கூடுகிறது, தமிழகத்தில் உள்ளது போல எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போகத் தோன்றுவதில்லை என்று பொருள்படக் கூறினார்.

பிறகு, நாகார்ஜுனன் பேச எழுந்தார். தன் மொழி குறித்துக் கூற வந்தவர், லண்டனில் பணி காரணமாக, உடன் தமிழில் பேச அதிகம் யாருமில்லாததன் காரணமாக, தமிழ் பேச வாய்ப்புக் கிடைப்பது எப்போதாவதுதான் என்று கூறினார். தமிழக இலக்கிய உலகில் நிலவும் அரசியலும் தனக்குத் தெரியாது என்றார். ஆங்கிலத்தில் எழுதினால் கிடைக்கும் பணமும், பெயரும் அதிகமென்றாலும், அது தன்னால் இயலாததல்லவென்றாலும், தமிழில் எழுதவில்லையென்றால் தான் இல்லை என்றார். மேலும் ஆம்னெஸ்டியில் பணிபுரியும் பின்புலத்தில், அவரது பணி, நம் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் இருப்பதில் அவருக்குள்ள கூடுதல் சுமையை, கூட்டத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டினார்.

கடந்த இரு ஆண்டுகளாகத் தான் கடினமாக உழைத்திருப்பதாகவும், அதற்கான பலனே இந்நூல்களென்றும் கூறினார். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆற்றலைச் சில சமயம் தற்போது உணர்ந்ததாகவும், ஆயினும் இத்தகைய உழைப்பை உடல் தாங்குவதில்லை என்பதால் சற்றே மட்டுப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

இலக்கியப் போக்கு என்பதைப் பத்தாண்டுகளில் கணக்கிடுவது சரியல்ல, அது நூறு, நூற்றைம்பது ஆண்டுக் கணக்கிலேயே அறியப்படக் கூடியது என்றார். ”தென்னகத்தின் வரலாறு இன்னும் யாராலும் முழுமையாக, சரியாக எழுதப்படவில்லை, சென்ற நூற்றாண்டுகளின் இந்திய வரலாறு என்பது வங்கத்தை மையமாகக் கொண்டே கூறப்பட்டிருக்கிறது. சில முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதான அளவில் நின்று போய் விட்டன, அதன் மீதான விரிந்த பார்வையைக் காணவில்லை. கோணங்கி கூறியது போல, இயற்கை என்பதை நம் இலக்கியத்தில் காண இயலவில்லை. இயற்கையுடன் இயைந்த, ஒரு பரந்த காலகட்டத்தைக் கூறும் வகையிலான பணிகள் செய்யப்படவில்லை. நாவலாக அதை எழுதுவது சற்றே எளிது, ஆனால் அது போதாது” என்றவர், தான் அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் இரு ஆண்டுகளில் அதனை எதிர்பார்க்கலாமென்றும் கூறினார்.

கூடங்குளம் குறித்து சண்முகம் அவர்கள் கூறியதன் தொடர்ச்சியாக, எண்பதுகளில் அவரும் நண்பர்களும் தீவிரமாக இயங்கியிருந்தபோதும், அதன் பின் நடந்தவற்றை அவர்களால் முன்கூற இயலாமல் போனதானது பணிவைக் கற்றுத் தருவதாகவும், இப்பணிவுடனே எதிர்வரும் செயல்களைச் செய்யவேண்டுமென்றும் கூறினார்.
சிறுபத்திரிகைகளில் எழுதுவது குறித்துக் கூறும்போது இணையம் என்பது ஓர் இடைநிலை ஊடகம் மட்டுமே என்றார்.

நிறைவு செய்யுமுன்பு, வளர்மதியைப் பேச அழைத்தார் பேரா வீ.அரசு. வளர்மதி, இணையத்தின் ஊடக சுதந்திரத்தை விதந்து பேசினார். தனது மார்க்ஸ் குறித்த கட்டுரையை எந்தச் சிறுபத்திரிகையும் வெளியிடாத நிலையில் கீற்றில் வெளியிட இயன்றதைச் சுட்டிக்காட்டினார். இலக்கிய உலகில் விவாதங்கள், தனி மனித விரோதமின்றி நடைபெற வேண்டுமென்றவர், தேவைப்பட்டால் தான் கடுமையாகப் பேசவும் தயங்க மாட்டேன் என்றார். இணையத்தின் சுதந்திரம் பற்றி பதிலிறுத்த அரசு, சுதந்திரம் என்பது ஊடகம் யார் கையிலுள்ளது என்பதைப் பொறுத்ததுதானேயொழிய, இணையம், அச்சு என்ற வேறுபாடு இல்லை என்றார்.

கூட்டம் நிறைவுபெற்றது.

1 comment:

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இப்பதிவு குறித்து நாகார்ஜுனன் அவரது பதிவின் பின்னூட்டத்தில் கூறியது.

//
வித்யாசாகரன்

உங்கள் பதிவுகளை வாசித்தேன். உரையில் செயப்பாட்டுவினையைத் தவிர்த்திருந்தேன் என்பதைக் கவனிக்கவும்.

நாகார்ஜுனன்
//

http://nagarjunan.blogspot.com/2009/10/1.html