Saturday, March 25, 2006

நானும் நானோ? - 2

இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.

'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.

அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?

ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?

எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.

இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.

நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.

8 comments:

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சே! இந்தப் பதிவைப் படிக்கையில் (எனக்கே) குமட்டுகிறது. மாற்றி மாற்றி 'நான்', நான், என், எனக்கு என்று...

sathesh said...

'நான்' பற்றி நீங்கள் குறிப்பிடுகையில் சில கேள்விகள் தோன்றுகின்றன:

நான் என்பது ஒன்றை இயக்கும் ஆற்றல் சக்தியா அல்லது இயக்கத்தை உணரும் உணர்வா அல்லது தான் உணரும் ஒன்றை தன் உடல் மனதோடு ஒப்பிட்டு அதற்கேற்ப அவ்வுணர்வை அறிந்துகொள்ளும் அறிவா?

Anonymous said...

Hello VidhyaSankar,

'நான்'-யை உற்று நோக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இந்தச் சின்ன வயசில-யே இப்படி ஒரு ஞானமா? happy to know such persons are still there in this materialistic world.

-சக்தி

Anonymous said...

Hello VidhyaSankar,

நான்-யை உற்று நோக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இந்தச் சின்ன வயசில-யே உங்களுக்குள் ஒரு ஞானம். வாழ்த்துக்கள்

-சக்தி

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

பாழ்,

'உணர்வு' தான் 'நான்' என்று கருதுகிறேன். இயக்கத்தை உணர்வது அதன்பின் அதன் பயனாக வருவது. இருப்பை உணர்வது என்று சொல்வது கூட, உணர்வை உணர்வதே. இயக்கமோ, இருப்போ அதை உணர்வதற்கு, 'நான்' என்ற அடிப்படை உணர்வுதான் காரணம்.
உடல், மனதோடு ஒப்பிடல், அறிதல் எல்லாம் இந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டு வருபவை.

இந்த அடிப்படை உணர்வாகிய 'நான்' என்பது, ஏதோ முழுமைக்காகக் கத்திருக்கிறதா? ஏன், அதை உணரும்போதெல்லாம் ஒரு வெறுமையை உணர்வதுடன், அதை மறைக்க அல்லது நிறைக்க ஏதாவது செயல்பாடும் செய்கிறோம்?

அதை நிறைவு பெறச் செய்யும் ஒன்று உள்ளதா? ஏதோ ஒன்றைச் செய்வதன் மூலம், அடைவதன் மூலம் அந்த உணர்வை மழுங்கடித்து, வேறொன்றில் லயிப்பதுதான் நமது நோக்கமா?

அறிவதென்பது வெல்வதன்றோ? ஒன்றை உணர்ந்து, ஆராய்ந்து, அறியும்போது அதை வென்றதான இன்பம் ஏற்படுவதுடன், அதன் மேலான மயக்கம் குறைவதுவும் உண்டல்லவா? இதற்காகத்தானா, இந்த ஆராய்ச்சி செய்கிறோம்?

- வித்யா

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சக்தி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.
'ஞானம்' என்று கூறி விட்டீர்கள். தேடல் மட்டும்தான், வேறொன்றுமில்லை. இந்தத் தேடலையே சில சமயங்களில் உற்று நோக்கும்போது, அதன் பொருளும் பிடிபடுவதில்லை. ம்ம்...
எப்படியோ, என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கானவற்றுள் ஒன்று, இந்தத் தேடல், இப்போது.

- வித்யா(சாகரன்)
:-)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

பாழ், சக்தி,

தாமதத்திற்கு மன்னிக்கவும். சில நாட்களாக ஊரில் இல்லை. ஒரே அலைச்சலும் கூட.

- வித்யா

Anonymous said...

இந்தத் தேடலுக்கும் - தேடவேண்டும் என எண்ணுவதற்கும் ஞானம் வேண்டும். முயற்சி வேண்டும்.
இந்தக் காலத்தில யார் இதையெல்லாம் பண்றாங்க? எல்லாரும் பணம், புகழை நோக்கித் தானே போய்க்கிட்டு இருக்காங்க..
-சக்தி