Tuesday, February 13, 2007

காதலிலே என்ன ஆச்சு?

( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)


நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!

அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!

எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!

ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!

13 comments:

ஷைலஜா said...

கவிதை நன்றாக இருக்கிறது .வாழ்த்தும் பாராட்டும்.
ஷைலஜா

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நன்றி ஷைலஜா!
அப்பப்போ வாங்க!

சின்ன வயசில காதல் பத்தி இன்னும் நல்லாவே எழுதியதுண்டு. :)
அது ஒரு கனாக் காலம்!

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு.. கொஞ்சம் வித்தியாசமான நடையா இருக்கட்டும் என்ற முயற்சியா?

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நன்றி சேதுக்கரசி!
ஆமாம், கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான்.

ஒரு விஷயம் மனசை ரொம்ப பாதிச்சு அதைச் சொல்லணும்னு வரும்போது வடிவம், எதுகை மோனை தேவை இல்லாம அடர்த்தியா, கனமா, அழுத்தமா வந்திடும். அதை எழுதாம மனசிலயே வைக்க வைக்க அதோட செறிவு அதிகமாகும். கொஞ்சம் கூடிப் போனா, அப்படியே நிறைய கேள்விகள் வந்து அது ஆவியாப் போயிடும்.

ஆனா, சும்மா பிப்ரவரி 14 வருதேன்னு எழுதும்போது, ஒரு நீர்த்துப்போன கவிதைதான் வருது. அதைக் கொஞ்சம் அழகு படுத்த வடிவம் தேவைப்படுது.

அப்புறம், இதையே இப்படி எழுதினா வைரமுத்துவோட கம்பீரம் கொஞ்சம் வரும்னு நினைக்கிறேன் (டூயட் மாதிரி).
என்ன சொல்றீங்க? :)

நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சம் - உன்
வேல்விழியில் விழுவதற்கே உயிரின்னும் மிச்சம்!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடம் - என்
நாநரம்பில் உன்பேர்தான் நாள்முழுதும் ஓடும்!
..........
..........

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//ஆனா, சும்மா பிப்ரவரி 14 வருதேன்னு எழுதும்போது...
இந்த வரிகள், ஏதோ கடனேன்னு எழுதின மாதிரி சொல்லுது.
உண்மைக் காரணம் என்னன்னா, இந்த காதல்-ங்கிற பாடுபொருள் கிட்ட பட்ட பாடு. :)
விஷயம் ரொம்ப நெருங்கி வரும்போது கவிதை எழுத முடியாது. ஒண்ணு கதறி அழத் தோணும் இல்ல சந்தோஷமாக் கத்தத் தோணும். கவிதை ஒரு இடைவெளி விட்டுத்தான். அதுவரை இப்படி சில்லடிக்கலாம்.
'Map is not the territory'னு சொல்வாங்க.
மேடோ பள்ளமோ 'territory'தான் எனக்குப் பிடிச்சது. கவிதை என்ன கவிதை?
:)

சேதுக்கரசி said...

உங்க கருத்தைச் சொல்றீங்களே என் கிட்ட கேள்வி கேட்கிறீங்களான்னே தெரியல.. ஆனா ஒரு ரேஞ்சுல பேசிட்டிருக்கீங்கன்னு மட்டும் லேசுவாசா புரியுது :-D

செல்வநாயகி said...

உங்களின் எல்லாப்பதிவுகளையும் படித்தேன். பல இடங்களில் கூர்மையான அணுகுமுறை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சேதுக்கரசி,
ஆமாம், கொஞ்சம் வாய்ப்புக் கிடைச்சா ரொம்ப உளறிடுவேன். :)
கண்டுக்காதீங்க!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

செல்வநாயகி!
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுடைய பதிவுகளை நீண்ட நாட்களாக நான் ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறேன், ஆனால் பின்னூட்டமிட்டதில்லை. நான் வளர்ந்தது கோவை மாவட்டத்தில் என்பதால், உங்களுடைய மலரும் நினைவுப் பதிவுகளை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் ஆழச் சிந்தித்து எழுதுவது மிகவும் பிடிக்கும்.
நான் எழுதியவை உங்களுக்குப் பிடித்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. :)

துளசி கோபால் said...

என்னமோ கூடி வர்றாப்போல இருக்கு.

வாழ்த்து(க்)கள்.

பத்திரிக்கை அனுப்ப மறந்துறாதீங்க:-)))

பொதுவா நான் கவிதை ரசிகை இல்லை. இது கொஞ்சம் வசனநடையா இருந்ததாலே புரிஞ்சது:-)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

துளசியம்மா, வாங்க!
அய்யோ, நீங்க வேற. இது சும்மா பிப்ரவரி 14க்காக எழுதினது.
என் கதை இங்க இருக்கு பாருங்க! :)

http://vidyasa.blogspot.com/2007/02/blog-post_13.html

(முதலாவது நிதர்சனம், இரண்டாவது மிகை, மூன்றாவது விமர்சனம்)

:)

Chandravathanaa said...

நன்றாக இருக்கிறது

riya said...

ena solurathunae theriyala, poorichu poitaen.... Ungaloada ella vasagangalaiyum padichaen, migavum arumai