Saturday, March 13, 2004

என்ன எழுத?

ஆக நானும் வலைப்பூ ஒன்றை என் பெயரில் தொடங்கிக் கொண்டு விட்டேன். இனி, இதில் என்ன எழுதுவது? இந்தக் கேள்விக்குப் பதிலை மிகவும் சீரியஸாக யோசிக்கத் தொடங்கியதால்தான், சென்ற முறை இதைத் தொடராமல் விட்டு விட்டேன்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.

No comments: