Monday, March 15, 2004

ஏன் எழுத?

ஏன் எழுத வேண்டும்?
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.

இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?

இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.

எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.

இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.

கண்டு பிடிப்போம்...

No comments: