Saturday, February 18, 2006

ஏன் எழுத? - 2

ஏன் எழுத வேண்டும்? - 2

சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.

என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?

ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.

இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.

இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)

-தொடரும்

1 comment:

us ram said...

sir please write some more.நான் எப்பொழுதும் சிந்தனையை தூன்டகூடிய வரிகளை மட்டும் அதிகம் தேடுவேன் அந்த விதத்தில் உங்கள் படைப்பு மிகவும் அறுமை so thanks lot ,pls continue ur way of writting