Saturday, February 18, 2006

ஏதாவது எழுத

மீண்டும்

இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.

சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.

மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?

இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?

ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.

No comments: